ஆகஸ்டு 2002 இல் “கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்” என்ற தலைப்பில் ஆதிவாசிகளின் கவிதைகளை நான் தொகுத்து மொழிபெயர்த்து வெளியிட்டேன். ஒரு நாள் தோழர் சி.மகேந்திரனிடமிருந்து தொலைபேசி வந்தது. தோழர் நல்லகண்ணு என்னை உடனடியாகச் சந்திக்க வேண்டுமென்று சொன்னதாகத் தெரிவித்தார். உடனே கட்சி அலுவலகம் சென்றேன். நண்பர் மகேந்திரன் என்னை தோழர் நல்லகண்ணுவிடம் அழைத்துச் சென்றார். ஒரு கட்சியின் தலைவர் என்பதின் வாசனையே இல்லை. எளிமையின் உச்சகட்டம். பலநாள் பழகியது போன்ற இனிமை. தோழமையோடு வரவேற்றுப் பேசினார். நான் எழுதிய ”அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” தொட்டு எனது பல நூல்களை அவர் படித்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.. தான் சிறையில் இருந்த காலத்தில் சிறைச்சாலை நூலகராகப் பணி புரிந்த தகவலை ஒரு சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடு சொன்னார். எனது ஆதிவாசி கவிதைகள் நூலைப் படித்ததாகவும், தமிழில் முதல் முறையாக இதைச் செய்ததற்காக உடனே என்னை நேரில் சந்தித்துப் பாராட்டியே தீரவேண்டும் என்று தோன்றியதாகவும் சொன்னார். இக்கவிதைகளை நான் எப்படி திரட்டினேன் என்றும் கேட்டார்.
” நான் ஆதிவாசிகள் வாழும் பகுதிகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் அவர்களின் தற்கால வாய்மொழிக் கவிதைகளை என்னுடன் வரும் அம்மொழிக்காரர்களின் உதவியுடன் மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்லி எழுதி வைத்துக் கொள்வேன்.” என்று சொன்னேன். வெகுவாகப் பாராட்டினார்.
No product review yet. Be the first to review this product.